தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
x

ஜோலார்பேட்டை அருகே தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அக்ராகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் அனுமந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் என்.கே.ஆர்.சூர்யகுமார், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்செல்வி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் ஆகியோர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடுதல், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து பேசினர்.

ஜோலார்பேட்டை தொகுதி பொறுப்பாளர் சா.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள். இந்திய மாநிலங்களிலேயே தி.மு.க. மிகப் பெரிய கட்சியாக விளங்க வேண்டும் என்பது தலைவரின் கனவும், ஆசையுமாக உள்ளது. மத்தியில் உள்ள மதவாத ஆட்சி தமிழகத்தில் காலூன்ற கூடாது. கலைஞருக்கு பிறகு இன்றைய சமூகநீதியின் சரித்திர நாயகன் இந்திய தேசம் போற்றுகின்ற வகையில் தி.மு.க. தலைவர் விளங்கி வருகிறார்.

இதனால் தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு தொகுதியில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 66 பூத் கமிட்டிகளில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் ஒன்றிணைந்து புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி தி.மு.க.விற்கும், தி.மு.க. தலைவருக்கும் இன்னும் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட தி.முக. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story