மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசு - ஓபிஎஸ் கண்டனம்
ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்த பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்"; "அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 35 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்"; "புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என போலி வாக்குறுதிகளை அளித்து அதன்மூலம் ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிகமாகவும் பணியாற்றி கொண்டிருப்பார்களை வேலையிலிருந்து எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் சதா சர்வகாலமும் சிந்தித்து வருகிறதேயொழிய புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ அல்லது காலிப் பணியிடங்களை நிரப்புவதினே கவனம்
செலுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக அனைத்தையும் தனியார்மயமாக்க தி.மு.க. அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் மூலம் சம்பளம் பெற்று வந்த ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்த தி.மு.க. அரசு, தற்போது ஈரோடு மாநகராட்சியின் பணிகளையும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான துப்புரவு மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஈரோடு மாநகராட்சிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பணிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா .திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தருணத்தில், 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. தலைவர் நடத்திய ஒரு நாடகம்தான் என் நினைவிற்கு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் சமயத்தில், 'உங்கள் தொகுதியில் நான்' என்ற பிரச்சாரத்தை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இப்போதைய முதலமைச்சர் கோவையில் மேற்கொண்டார். அப்போது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த திருமதி விஜயா என்கிற பெண்மணி விளாங்குறிச்சியில் அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்த 400 பேர் இருப்பதாகவும், இவர்களில் 250 பேர் மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிவதாகவும், 14 ஆண்டுகள் பணிபுரிந்த பின்பும் தங்களின் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த தி.மு.க. தலைவர் "நீங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள்; கொரோனா தொற்றின்போது நீங்கள் செய்த பணி மகத்தானது; உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்" என்று கூறினார். இந்தச் செய்தி 19-02-2021 அன்று ஊடகங்களில் செய்தியாக வெளி வந்துள்ளது.
இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்து மக்களின் வாக்குகளைப் பெற்ற தி.மு.க., வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான வகையில், அரசுத் துறைகளிலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாட்டைக் கண்டு, அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன்மூலம் தி.மு.க.வினருக்கு ஆதாயம் ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், தி.மு.க. அரசின் இந்த தொழிலாளர் விரோதச் செயல்பாட்டைக் கண்டு, தங்களுக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் உறைந்து போயிருக்கிறார்கள். வாக்குறுதிக்கு எதிர் மாறாக நடந்து கொண்டுவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதும், அதைச் சாதனை என்று கூறிக் கொள்வதும் வெட்கக்கேடானது, கேலிக்கூத்தானது, நகைப்புக்குரியது. இது சாதனை அல்ல, மக்கள்படும் வேதனை. சோதனைக்கு மேல் சோதனைகளை மக்கள் தி.மு.க. ஆட்சியில் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
'விடியலை நோக்கி' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று ஒரு குடும்பத்தின் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் செயல்பாட்டைப் பார்க்கும்போது 'எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே' என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள்தான் மக்களின் நினைவிற்கு வருகின்றன.
எனவே, அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி, ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அனைத்துத் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதோடு, மக்கள் தி.மு.க.வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.