தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

சென்னையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தலை நடத்திட வேண்டும். அந்த வகையில் தி.மு.க.வில் கிளை கழக செயலாளர் முதல் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கடந்த மாதம் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 72 மாவட்டங்களில் தென்காசி வடக்கு மாவட்டம் தவிர்த்து 71 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

இந்த நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு தனித்தனி அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்கள் மூலம் பேட்ஜூகளும் வழங்கப்பட்டுள்ளன.

4 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்குழு கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் அமைச்சர் எ.வ.வேலு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை விளக்கி கூறினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மீண்டும் தலைவராகும் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுசெயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மீண்டும் போட்டியிட நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

எனவே நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் 3 பேரும் ஒருமனதாக இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கடந்த முறை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் தி.மு.க. தலைவர் பதவியை ஏற்ற மு.க.ஸ்டாலின், இந்த முறை முதல்-அமைச்சர் அந்தஸ்தில் தி.மு.க. தலைவர் பதவியை ஏற்க இருப்பது அக்கட்சியினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.

தி.மு.க.வில் தற்போது துணை பொதுசெயலாளர் பதவியில் 5 பேர் உள்ளனர். இந்த பதவியிடத்தை 7 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் செயல் வடிவம் பெறும் என்றும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ள நிலையில் அந்த இடத்துக்கு புதிய நிர்வாகி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story