பிறந்த நாளையொட்டி மாலை அணிவிப்பதில் போட்டி: அண்ணாசிலைக்கு பூட்டு போட்ட தி.மு.க.வினர்;குழித்துறையில் பரபரப்பு
குழித்துறையில் பிறந்த நாளையொட்டி அண்ணாசிலைக்கு மாலை அணிவிப்பதில் தி.மு.க.வினரிடையே போட்டி ஏற்பட்டது. இதில் முதலில் வந்த ஒரு தரப்பினர் அண்ணா சிலைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை,
குழித்துறையில் பிறந்த நாளையொட்டி அண்ணாசிலைக்கு மாலை அணிவிப்பதில் தி.மு.க.வினரிடையே போட்டி ஏற்பட்டது. இதில் முதலில் வந்த ஒரு தரப்பினர் அண்ணா சிலைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சிலைக்கு பூட்டு
குழித்துறை சந்திப்பில் அண்ணாவின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலையில் அவரது பிறந்த நாளின் போது தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக சிலைைய சுற்றிலும் இரும்பு கிரில் கதவு அமைத்து பூட்டு போட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த பூட்டை திறக்கும் சாவி பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கொடுக்கப்பட்டிருக்கும். அரசியல் கட்சியினர் அந்த சாவியை பெற்றுக் கொண்டு பூட்டை திறந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மீண்டும் சாவியை அந்த ஓட்டலில் கொடுப்பது வழக்கம்.
இந்தநிலையில் குழித்துறை நகர தி.மு.க. செயலாளராக இருந்த பொன்.ஆசைத்தம்பி சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பதவி வேறொருவருக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து குழித்துறை நகர தி.மு.க. இரு பிரிவாக செயல்பட்டு வருவதாக ெதரிகிறது.
மாலை அணிவிக்க சென்றனர்
இந்தநிலையில் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று காலையில் நகராட்சித் தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றனர். ஆனால் அங்கு சிலையின் பீடத்தை சுற்றியுள்ள இரும்பு கிரில் கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வழக்கமாக சாவி இருக்கும் ஓட்டலில் சென்று கேட்டனர். அப்போது சாவியை தி.மு.க.வின் மற்றொரு பிரிவினர் வாங்கி சென்றதாகவும், அவர்கள் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இது பொன்.ஆசைத்தம்பியுடன் சென்ற தி.மு.க.வினர் மத்தியில் ஆத்திரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று மாலை அணிவிக்க முடிவு செய்தனர்.
சமாதானப்படுத்தினார்
ஆனால் அதற்கு நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன்னுடன் வந்திருந்த தி.மு.க. வினரை சமாதானப்படுத்தினார். அத்துடன் பூட்டை உடைக்காமல் மாற்று முறையில் மாலை அணிவிக்க முடிவு செய்தார்.
தொடர்ந்து மெலிந்த உருவம் கொண்ட தொண்டர் ஒருவரை இரும்பு கம்பியின் இடைவெளி வழியாக உள்ளே அனுப்பி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு தொண்டர் மட்டும் உள்ளே சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து அனைவரும் மரியாதை செலுத்தி விட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.