'தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகுகிறேன்'-செல்லூர் ராஜூ சவால்


தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால்   அரசியலை விட்டு விலகுகிறேன்-செல்லூர் ராஜூ சவால்
x

இப்போது நடந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

இப்போது நடந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சமுதாய கூடம்

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் மைனர் தோப்பு வடக்கு தெரு பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30½ லட்சம் செலவில் சமையல் அறை மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய சமுதாய கூடத்தினை எம்.எல்,ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசு வாக்களித்த மக்களை எல்லாம் கசக்கி பிழிகிறது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்ற வில்லை. பூசணிக்காயை குண்டா சட்டியில் மறைப்பது போல, கொடுத்த வாக்குறுதிகளை மறைக்க பார்க்கிறார்கள். தற்போது மக்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள்.

அரசியலை விட்டு விலகுகிறேன்

சொத்து வரியை உயர்த்தினார்கள். இப்போது மின்சார கட்டணத்தையும் உயர்த்திவிட்டார்கள். நான் ஒன்று சொல்கிறேன், வாக்களித்த மக்களுக்கு ஆட்சியை மாற்றும் அதிகாரம் மட்டும் இருந்தால் இன்று தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்து இருக்கும். ஜனநாயகத்தில் இப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்று மக்கள் ஏங்குகிறார்கள். தேர்தலை இப்போது வைக்க சொல்லுங்கள். அ.தி.மு.க.தான் ஆட்சியை பிடிக்கும். ஒருவேளை தி.மு.க. ஆட்சியை பிடித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.

வன்முறை

தி.மு.க. ஆட்சியில் துன்பம், துயரம்தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு கேலி கூத்தாக இருக்கிறது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. சிறு, குறு தொழில் முனைவோர்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் வழங்கிய 10 சதவீத மானியத்தை 6 சதவீதமாக குறைத்துவிட்டார்கள். மின்வெட்டும் அதிகமாக இருக்கிறது. எதற்கு எடுத்தாலும், ஒன்றிய அரசு என்று சொல்லி மத்திய அரசு மீது பழிபோடுகிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்த போது எங்களை அடிமை அரசு என்று சொன்னார்கள். ஆனால் தி.மு.க.தான் அடிமைக்கு, அடிமை அரசாக இருக்கிறது. இது திராவிட மாடல் என்று சொல்வது கேலி கூத்தாக உள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளியில் மாணவி ஸ்ரீமதி, 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த பின் போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அங்கு வன்முறை அரங்கேறிவிட்டது. தும்பை விட்டு, வாலை பிடிக்கும் கதையாக இது இருக்கிறது.

உதயகுமாருக்கு பதவி

மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கவில்லை. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளில் எந்த பணியும் நடப்பதில்லை. குறிப்பாக தீவிர துப்புரவு பணி கூட செய்வதில்லை. மதுரை மாநகராட்சி மேயருக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அவருக்கே ஒரு சூப்பர் மேயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு சமுதாயத்தில் இருந்து, கட்சி பதவியில் நீக்கப்பட்டவருக்கு பதில், அதே சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுப்பது வழக்கம். அந்த அடிப்படையில் உதயகுமாருக்கு பதவி கொடுத்து இருக்கலாம். அவர் சிறப்பாக பணி செய்யக்கூடியவர். தென்மாவட்டத்திற்கு சட்டமன்ற துணை தலைவர் பதவி கொடுத்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அ.தி.மு.க.வில் சாதி-மதம் கிடையாது. இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story