நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-ஜவாஹிருல்லா பேட்டி
‘வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ என்று ஜவாஹிருல்லா கூறினார்.
'வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்' என்று ஜவாஹிருல்லா கூறினார்.
பேட்டி
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நெல்லை மேலப்பாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் இருப்பது போல நெல்லை மாநகராட்சி அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி சார்பிலே ஒரு வார்டு அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றும் என அந்த கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்களது கனவு தமிழகத்தில் பலிக்காது.
40 தொகுதிகள்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அந்த கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு நிச்சயம் இடம் இருக்கும். திராவிட கொள்கை என்பது அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு கொள்கை ஆகும்.
அனைவருடன் அனைவருக்குமான வளர்ச்சி என்று மோடி சொல்கிறார். ஆனால் அதானி போன்ற தனிநபர் வளர்ச்சி தான் மோடியின் கொள்கையாக உள்ளது.
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய வளர்ச்சி தான் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.