ராயக்கோட்டையில் தி.மு.க. கூட்டத்தில் வன்முறை வழக்கு: முன்னாள் அமைச்சர் உள்பட 9 பேர் விடுதலை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


ராயக்கோட்டையில் தி.மு.க. கூட்டத்தில் வன்முறை வழக்கு: முன்னாள் அமைச்சர் உள்பட 9 பேர் விடுதலை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x

ராயக்கோட்டையில் தி.மு.க. கூட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 9 பேரை விடுதலை செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பஸ் நிலையம் அருகில் கடந்த, 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க., பிரமுகருமான முல்லைவேந்தன் கலந்து கொண்டார். அவரை வரவேற்று ராயக்கோட்டை அண்ணாசிலை அருகே தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து, தஸ்தகிர் (வயது 20) என்பவர் இறந்தார். இதையடுத்து தி.மு.க., கூட்டத்தில் கலவரம், வன்முறை வெடித்தது. இதில், அரசு வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக தர்மபுரி மாவட்டம், நம்மாண்டஅள்ளியை சேர்ந்த மாதேசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் டி.செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டி.எம்.அரியப்பன், நாராயணமூர்த்தி உள்பட 10 பேர் மீது பொது சொத்து, அரசு வாகனங்களை சேதப்படுத்துதல், ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த 10 பேரில் முருகேசன் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

9 பேர் விடுதலை

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த, 20 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சக்திவேல் தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் விஸ்வபாரதி ஆஜரானார்.

இந்த வழக்கில் விடுதலையானதையடுத்து தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.


Next Story