தமிழகத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுக்காமல்பா.ஜனதா ஆதாரமில்லாத குற்றங்களை சாட்டுவதாக நாராயணசாமி தெரிவித்தார்
தமிழகத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுக்காமல் பா.ஜனதா ஆதாரமில்லாத குற்றங்களை சாட்டுகிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
தமிழகத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுக்காமல் பா.ஜனதா ஆதாரமில்லாத குற்றங்களை சாட்டுகிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்ைத வாங்கியதில் எந்தவித பணபரிவர்த்தனையும் தவறாக நடக்கவில்லை என்று கோர்ட்டில் வழக்கு முடிக்கப்பட்ட பிறகும், 8 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பா.ஜனதா அரசின் அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு வருகிற 13-ந்தேதி ஆஜராகுமாறு நோட்டீசு அனுப்பியுள்ளது.
பிற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவி மிரட்டுகின்றனர். இதனைக் கண்டித்து வருகிற 13-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
ஆதாரமில்லாத குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆண்டுகளில் எந்த சாதனையும் செய்யவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்கள் 25 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். மத்திய பா.ஜனதா அரசின் வேதனைகளை மக்களிடம் எடுத்து கூறுவோம்.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து விட்டதை போன்று தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழக அரசின் மீது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரமில்லாத குற்றங்களை சாட்டுகிறார். தமிழகத்தில் தி.மு.க. அரசு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு மீது பொய்யான குற்றங்களை சாட்டுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வரும். வருகிற 2024-ம் ஆண்டு 17 கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
---------------