ரியல் எஸ்டேட் தொழிலாளி கொலை வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது
ரியல் எஸ்டேட் தொழிலாளி கொலை வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ருத்ரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 37). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு திருக்கழுக்குன்றம் மசூதி தெரு மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனு அளித்தார்.
மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சர்புதீன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதன் மீது விசாரணை மேற்கொண்டு அக்கிரமிப்புகளை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் சர்புதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்மநபர்களால் சர்புதீன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கைது
திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தவுலத்பீ (55), ரஹ்மான் (28), இப்ராஹிம் (31), மன்சூர் அலி (31), ரஷித் உசேன் (22), முகமது அஜீஸ் (21), ராமு என்ற ரகமத்துல்லா (20), அப்துல் காதர் (27), பாரூக் (38), சலீம் பாஷா (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.