வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி
தளி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அவர்களுக்கு ஒய்.பிரகாஷ்எம்.எல்.ஏ. முன்னிலையில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தளி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அவர்களுக்கு ஒய்.பிரகாஷ்எம்.எல்.ஏ. முன்னிலையில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தளி ஊராட்சி ஒன்றியம்
தளி ஊராட்சி ஒன்றியம் 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தற்செயல் தேர்தல் நடத்தப்பட்டு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் 1,927 வாக்குகள் பெற்று 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை அடுத்து சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட ஹரிஷ் 1,307 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தினேஷ் 221 வாக்குகளும், அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட மாதேசப்பா 90 வாக்குகளும் பெற்றார். வெற்றி பெற்ற சீனிவாசனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தேவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், பானுபிரியா ஆகியோர் வெற்றி பெற்றதற்கானசான்றிதழ் வழங்கினார்.
வாழ்த்து
வெற்றி பெற்ற சீனிவாசன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், தளி முன்னாள் தலைவர் சந்திரப்பா, கங்கப்பா, சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, துரைசாமி, எல்லப்பா, பேரிகை ஒன்றிய செயலாளர் நாகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சேக்ரசீத், அஞ்செட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் காதர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம்
கெலமங்கலம் ஒன்றியத்தில் 12-வது வார்டு தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாரப்பா என்பவர் 2,479 ஓட்டுகள் பெற்று 352 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட அபிராமையா 1,127 ஓட்டுகளும், அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட ரகு 38 ஓட்டுகளும் பெற்றனர். தேர்தல் அதிகாரி சந்தானம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் முன்னிலையில் வேட்பாளர் மாரப்பாவுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, சென்னகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சின்னராஜ், பாக்கியராஜ், ஸ்ரீதர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள். மேலும் கொப்பகரை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 326 வாக்குகள் பெற்ற முருகேசன் வெற்றிபெற்றார்.