தி.மு.க. கவுன்சிலர்களுக்கு காசோலை வழங்கியது குறித்து விசாரணை


தி.மு.க. கவுன்சிலர்களுக்கு காசோலை வழங்கியது குறித்து விசாரணை
x

ஒடுகத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் நேரடியாக காசோலை வழங்கியது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விசாரணை நடத்தினார்.

வேலூர்

ஒடுகத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் நேரடியாக காசோலை வழங்கியது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விசாரணை நடத்தினார்.

நேரடியாக காசோலை வழங்கினார்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 13 வார்டுகளில் தி.மு.க.வும், இரண்டு வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக தி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களது வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஒப்பந்ததாரரின் மூலம் சாலை வசதி, கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த பணிகளுக்கு நிதி வழங்க வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் நேரடியாக 13 வார்டு கவுன்சிலர்களுக்கு காசோலையை செயல் அலுவலர் வழங்கி உள்ளார். இந்தக் காசோலையை 5 கவுன்சிலர்கள் வங்கிக்கு சென்று பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 8 தி.மு.க. கவுன்சிலர்கள் காசோலையை வங்கியில் செலுத்தாமல் அவர்களிடமே வைத்திருந்தனர்.

உதவி இயக்குனர் விசாரணை

இந்த தகவல் பேரூராட்சி உதவி இயக்குனர் ஜிஜா பாய்க்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முனிசாமியை அழைத்து விசாரணை மேற்கொண்டார். பேரூராட்சி செயல் அலுவலர் கவுன்சிலர்களுக்கு நேரடியாக காசோலை வழங்கக் கூடாது. ஒப்பந்ததாரரிடமே வேலை செய்ததற்கான காசோலையை வழங்க வேண்டும். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி கவுன்சிலருக்கு காசோலை வழங்கியுள்ளார். இதனால் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தனர்.

இது சம்பந்தமாக வேலூர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜா பாய் ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து நேரடியாக காசோலை பெற்றுக்கொண்ட 13 கவுன்சிலர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டார். இதில் 5 கவுன்சிலர்கள் பணத்தை திருப்பி செலுத்தியதாகவும், மீதி 8 கவுன்சிலர்கள் காசோலையை திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story