விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என தி.மு.க.வினர் வதந்தி பரப்புகிறார்கள்-திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என தி.மு.க.வினர் வதந்தி பரப்புகிறார்கள் என்று திருச்சியில் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், தமிழகத்துக்கு காவிரி நீர் தரமறுப்பதை கண்டித்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்றதை கண்டித்தும் திருச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் நேற்று கருப்பு பட்ைட அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அர்ஜூன்சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. இது பற்றி தி.மு.க.வினரிடம் கேட்டால் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள். ஆனால் விலைவாசி சீராக இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் பணத்தில் கருணாநிதிக்கு பேனா சிலை அமைப்பது அரசு பணத்தை வீணடிப்பதாகும். கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என்று மாற்றி வைக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது பல வழக்குகள் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி கலந்து கொள்கிறது. தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் இந்து கடவுள்கள் பற்றி பேசியது மதக்கலவரத்தை தூண்டுவதுபோல் உள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.