'அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கு தி.மு.க. தான் காரணம்' சசிகலா குற்றச்சாட்டு
‘அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கு தி.மு.க. தான் காரணம்’ என்று சசிகலா குற்றம் சாட்டினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் மாயத்தேவர். இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு, அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
நேற்று முன்தினம் இவர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல், சின்னாளப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலா அஞ்சலி
மாயத்தேவரின் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. என்பது தனிப்பட்ட ஒரு நபருக்கானது அல்ல. தலைவர் (எம்.ஜி.ஆர்.) கட்சி ஆரம்பிக்கும் போது, அது ஏழைகளுக்கான கட்சி என்று சொல்லி தான் ஆரம்பித்தார். யார் பொதுச்செயலாளர் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தொண்டர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். அது தான் உண்மையான முடிவு. அதை நோக்கித்தான் இந்த இயக்கம் செல்லும்.
தி.மு.க. தான் காரணம்
நிச்சயமாக வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வேன். அதற்குள், கட்சியை விட்டு விலகி இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விடுவேன். இது தான் அம்மாவுக்கும், தலைவருக்கும் நான் செய்கிற கடமையாக நினைக்கிறேன். அதை நான் நிச்சயம் செய்வேன்.
என்னை பொறுத்தவரை, கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளையும் சந்தித்து வந்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் குழப்பத்துக்கும், பிளவுக்கும் தி.மு.க. தான் காரணம். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது.
இவ்வாறு சசிகலா கூறினார்.