கடைக் கோடி மக்களுக்கும் வீடு, சாலை வசதி ஏற்படுத்தி தருவதே தி.மு.க. அரசின் கடமை
கடைக் கோடி மக்களுக்கும் வீடு, சாலை வசதி ஏற்படுத்தி தருவதே தி.மு.க. அரசின் கடமை என்று அணைக்கட்டில் நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
அடிக்கல் நாட்டு விழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊனை ஊராட்சியில் உள்ள இருளர் இன மக்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பணி ஆணை வழங்கும் விழா ஊனை ஊராட்சியில் நடந்தது. கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசின் கடமை
தி.மு.க. அரசு பதவி ஏற்ற பிறகு இந்த 1½ ஆண்டுகளில் இருளர் இன மக்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வீடுகள் கட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது. 50 ஆண்டு காலமாக சாலை வசதி, வீடுகள் வசதி இல்லாத மலை கிராம மக்களுக்கும், கடைகோடி மக்களுக்கும் அடிப்படை வசதி, சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் முக்கிய கடமை.
இங்கு உள்ள மலை கிராமப்பகுதிகளுக்கு சாலை அமைத்து தர வேண்டுமென நந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். நெக்கினிமலை முதல் கொல்லை வரை சாலை வசதி ஏற்படுத்தி தர ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இவர் சட்டமன்ற நிகழ்ச்சியின் போது ஆணித்தரமாக பேசி தொகுதி மக்களுக்கும் மற்றும் மாவட்ட மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கே நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவார்.
24 மணி நேரமும்
இந்தியாவிலேயே பெண்களுக்காக அதிக அளவில் நல்ல திட்டங்களை கொடுத்து வருபவர் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
24 மணி நேரமும் மக்களுக்கு என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற யோசனையிலேயே நமது முதல்-அமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தது போல கஜானாவில் பணம் இல்லை என்றாலும் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வீடு தேடி வரும். ஜூன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 79 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள், என்னென்ன தேவைப்படுகிறதோ அத்தனையும் நிறைவேற்றி தருவதாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா குமார பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர், ஆஷா, ரமேஷ், ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் துரை பாபு, துணைத்தலைவர் வேண்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.