இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதுதி.மு.க. செய்த பாவம்


இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதுதி.மு.க. செய்த பாவம்
x

பா.ஜ.க. பாதயாத்திரை விமர்சனத்திற்கு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தி.மு.க. செய்த பாவம் தான் என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை

பாதயாத்திரை

பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை திருமயத்தில் "என் மண், என் மக்கள்" பாதயாத்திரை மேற்கொண்டார். அதன்பின் இரவில் அறந்தாங்கியில் பாதயாத்திரையை தொடங்கினார். செக்போஸ்டில் இருந்து நடக்க தொடங்கி கடைவீதி வழியாக பஸ் நிலையம் அருகே அண்ணாசிலை வந்தடைந்தார். அங்கு வேனில் நின்ற படி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாத காரணத்தினால் இந்த பகுதியில் வளர்ச்சி பணிகள் ஏதும் அதிகம் நடைபெறாமல் உள்ளது.

தி.மு.க. செய்த பாவம்

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் வரும். பா.ஜ.க.வின் பாதயாத்திரை பாவ யாத்திரை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அதற்கு நான் இங்கு பதிலளிக்கிறேன். 2009-ம் ஆண்டு முதல்-அமைச்சராக கலைஞர் பதவியில் இருந்த போது இலங்கையில் சண்டையின் ஒரு லட்சத்து 64 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் தி.மு.க. செய்த பாவம் தான்.

குடியால் பல குடும்பங்கள் பாதித்த நிலையில் தமிழக அரசுக்கு இது பாவம் இல்லையா. நாங்கள் தலையை நிமிர்ந்து பெருமையோடு செய்ததை சொல்லி உங்களது அன்பை பெறுவதற்காக வந்துள்ளோம்.

கச்சத்தீவை மீட்க

ஒருவேளை தி.மு.க. செய்த பாவத்தை நாங்கள் ஏற்று கொண்டால், அது தமிழக மக்களை பாதிக்காது என்றால், அந்த பாவத்தை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களுக்காக அதை ஏற்றுக்கொள்கிறோம். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 85 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பின் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்க மத்திய அரசிடம் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழக பா.ஜ.க. மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கார்த்திகேயன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருமயத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமும், அறந்தாங்கியில் 4 கிலோ மீட்டர் தூரமும் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார்.

அறந்தாங்கியை தொடர்ந்து ஆலங்குடியில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பாதயாத்திரையை அண்ணாமலை மேற்கொள்கிறார்.


Next Story