அமைச்சர் நேரு தலைமையில் நடந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கலந்து கொண்டது ஏன்?- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
அமைச்சர் நேரு தலைமையில், அரசியல் சார்பாக நடந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கலந்து கொண்டது ஏன்? என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
அமைச்சர் நேரு தலைமையில், அரசியல் சார்பாக நடந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கலந்து கொண்டது ஏன்? என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கோஷம்
மதுரை மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் இந்திராணி தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய சோலைராஜா, கடந்த 25-ந் தேதி மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் ஏன் நடந்தது? என்பதனை மேயர் விளக்க வேண்டும். தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காகதான் இந்த கூட்டம் நடந்ததாக தெரிகிறது. தி.மு.க. சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், நகர் பொறியாளர் அரசு ஆகியோர் ஏன்? கலந்து கொண்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து நின்று அ.தி.மு.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய கவுன்சிலர் ஜெயராமன், எங்கள் கட்சி அமைச்சரை சந்திக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை கேட்க உங்களுக்கு உரிமையில்லை என்றார். இதனால் இரு கட்சி கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
குடிநீர் குழாய்
அப்போது அனைவரையும் அமைதிப்படுத்திய மேயர் இந்திராணி, மக்கள் கோரிக்கைகள், வார்டு பிரச்சினைகள் குறித்து பேசுங்கள் என்றார். அதன்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசும்போது, குடிநீர் குழாய் பதிக்க, பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிவிட்டு செல்கின்றனர். மாதக்கணக்கில் பணி நடக்காமல் குழியும் மூடப்படாமல் உள்ளது. குழி தோண்டினால் உடனடியாக பணிகளை நடக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மண்டல தலைவர் வாசுகி:- 1-வது மண்டலத்தில் உள்ள 21 வார்டுகளில் 14 வார்டுகளில் பாதாள சாக்கடைப்பணி நடக்கிறது. இந்த பணிகள் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கிறது. அதனால் புதிதாக போட்ட குடிநீர் குழாயை தொழிலாளர்கள் உடைத்துவிடுகிறார்கள். அதை அவர்களால் உடனடியாக பழுதுப்பார்க்கவும் முடியவில்லை. போதுமான மேற்பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும் என்றார்.
தி.மு.க. கவுன்சிலர் ஜெயராமன்:- கரிமேடு போலீஸ்நிலையம் மாநகராட்சி கட்டிடத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த போலீஸ்நிலையம், மாநகராட்சிக்கு ரூ.56 லட்சம் வாடகை பாக்கி வைத்து இருக்கிறது. அதனை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மாட்டுத்தாவணியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் டைட்டல் பார்க் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாநகராட்சியில் ஒவ்வொரு அதிகாரியும் நான்கு பதவிகளை வைத்துள்ளனர். அதனால், அதிகாரிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து எந்த பணியும் நடக்கவில்லை என்றார்.