தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் - பா.ஜனதா வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்


புதுக்கோட்டை வக்கீல் சங்க அலுவலகத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்- பா.ஜனதா வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை

வக்கீல் சங்க அலுவலகம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா நேற்று புதுக்கோட்டையில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் வக்கீல் சங்க அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படம் வைத்து பிறந்தநாள் கொண்டாடுவதற்கு பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தி.மு.க.-பா.ஜனதா வக்கீல்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோஷங்களால் பரபரப்பு

கருணாநிதியை வாழ்த்தி தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் கோஷம் எழுப்பினர். இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல்கள் பாரத மாதாவுக்கு ஜே என கோஷமிட்டனர். இருதரப்பினரின் பலத்த கோஷங்களால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சி தலைவரின் படத்தை வக்கீல் சங்க அலுவலகத்தில் வைத்து பிறந்த நாள் கொண்டாடக்கூடாது, கருணாநிதி புகைப்படத்தை எடுக்க வேண்டும் என பா.ஜனதாவினர் கூறினர். இதற்கு தி.மு.க. தரப்பினர் மறுத்தனர். மேலும் இனிப்புகளை அங்கிருந்த வக்கீல்களுக்கு கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதாகவும், அதற்கு முன்னதாக அவரது பிறந்தநாளை வக்கீல் சங்க அலுவலகத்தில் நாங்கள் கொண்டாடுவோம் என பா.ஜனதா வக்கீல்கள் கூறினர்.

அண்ணாமலை பதாகை

இதையடுத்து அண்ணாமலையின் பிறந்த நாள் வாழ்த்து பதாகை உடனடியாக தயார் செய்து கொண்டு வரப்பட்டது. வக்கீல் சங்க அலுவலகத்தின் முகப்பு பகுதியில் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. வலதுபுறத்தில் அண்ணாமலையின் பிறந்த நாள் பதாகையை வைத்து பா.ஜனதா வக்கீல்கள், நிர்வாகிகள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். மேலும் இனிப்புகளை வழங்கினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் தள்ளு-முள்ளு என மோதல் வரைக்கும் சென்றது. கொலை மிரட்டல்களும் விடப்பட்டன. வக்கீல்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் சில வக்கீல்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகம் நேற்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story