தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தற்போது கல்லூரிகளில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகளை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவிகளை சேர்க்க வேண்டும். அவர்கள்தான் புதிதாக முதல் ஓட்டு போடுபவர்கள். அவர்களை நமது கட்சியில் சேர்த்தால் காலத்திற்கும் நமது கட்சியை விட்டு மாற மாட்டார்கள். முதல்-அமைச்சர் வழங்கிய புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்தவர்கள் அவர்கள். தமது குடும்பத்தையே தி.மு.க.விற்கு கொண்டு வருபவர்கள். சு.ஆடுதுறையில் 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் உறுப்பினர் ஆனார்கள்.

மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய வரிப்பணத்தைக் கூட கொடுக்க முன்வரவில்லை. பா.ஜ.க. இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழ்நிலையை தமது சர்வாதிகாரத்தால் கொண்டுவர நினைக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒன்றிணைக்க கூடிய தலைவராக உள்ளார். புதுவை உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். சிதம்பரம் தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணியைத்தான் தற்போது தொடங்கி உள்ளோம். முதல்-அமைச்சர் குன்னம் தொகுதிக்கு ஐ.டி.ஐ மற்றும் இந்த ஆண்டு பஸ் பணிமனையும் கொடுத்துள்ளார், என்றார். கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

கூட்டத்தில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் பேசினர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குன்னம் தொகுதிக்குட்பட்ட மங்களமேட்டை அடுத்துள்ள சு.ஆடுதுறையில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சிவசங்கர் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், குன்னம் தொகுதியின் பொறுப்பாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story