தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவிலில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளரும், மாநில அயலக அணி இணைச் செயலாளருமான புகழ்காந்தி, வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் நல்லசேதுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர் புனிதா, ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், "கலைஞர் நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக தி.மு.க. தலைவர் அறிவித்தது போல தி.மு.க.வில் புதிதாக 1 கோடி பேரை இணைக்க வேண்டும். இதற்காக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வரின் சாதனைகளை அனைவரும் எடுத்துக்கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை சேர்க்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர துணைச் செயலாளர் மாரியப்பன், கேபிள் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.