தி.மு.க. கட்சி அலுவலக பெயர் பலகை உடைப்பு: 5 பேர் கைது


தி.மு.க. கட்சி அலுவலக பெயர் பலகை உடைப்பு: 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:53 AM IST (Updated: 3 Nov 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே தி.மு.க. கட்சி அலுவலக பெயர் பலகையை உடைத்து, தலைவர்கள் படத்தை சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

பெயர் பலகை சேதம்

பெண்களை திமுகவினர் இழிவாக பேசி வருவதாக கூறியும் ,அதனை கண்டித்தும் பாஜக மகளிர் அணி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் புகழூர் நகர தி.மு.க. கட்சி அலுவலகம் வேலாயுதம்பாளையத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதி சேர்ந்த பிரதீப் (22), தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுகந்தன் (20), 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து, புகழூர் நகர கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சி அலுவலக பெயர் பலகையை கல்லால் அடித்து சேதப்படுத்தியும், அலுவலகத்தில் கொடி கம்பத்தில் இருந்த கொடியை கிழித்தனர்.

படங்கள்

பின்னர் புகழூர் நகர தி.மு.க. சார்பில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் அடியில் வரையப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரின் புகைப்படங்களில் சாணியை வைத்தும், கற்களால் அடித்தும் சேதப்படுத்தி உள்ளனர்.

5 பேர் கைது

இதுகுறித்து புகழூர் நகரக் கழகச்செயலாளர் குணசேகரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் பிரதீப், சுகந்தன், 15 வயது சிறுவன் ஆகியோர் மீதும் அவர்களை தூண்டியதாக முல்லை நகர் பகுதியை சேர்ந்த கரூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் தீனசேனன் (30), புகழூர் நகர பா.ஜ.க. தலைவர் கோபிநாத் (30), நகர பா.ஜ.க. அவைத்தலைவர் செந்தில் (42), இந்து முன்னணி கரூர் ஒன்றிய செயலாளர் ெரங்கசாமி, புகழூர் நகர பாஜக இளைஞரணி தலைவர் விக்னேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் பிரதீப், சுகந்தன், 15 வயது சிறுவன், நகர பா.ஜ.க. அவைத்தலைவர் செந்தில், இந்து முன்னணி கரூர் ஒன்றிய செயலாளர் ெரங்கசாமி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த சம்பவத்தை கண்டித்து புகழூர் நகரக் கழகச்செயலாளர் குணசேகரன் தலைமையில் தி.மு.க.வை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் அடியில் கூடிநின்று நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story