தி.மு.க. ஆட்சி நீட் தேர்வை ஒழிக்கும் என மக்கள் நம்ப தயாராக இல்லை -எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. ஆட்சி நீட்டை ஒழிக்கும் என மக்கள் நம்ப தயாராக இல்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜெயலலிதாவின் ஆட்சியிலும், அவருடைய நல்லாசியோடு நடைபெற்ற ஆட்சியிலும் நீட்டை ஒழிக்க சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. அதேநேரத்தில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன.
ஜெயலலிதா அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
நம்ப தயாராக இல்லை
இனியும் இந்த தி.மு.க. ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்ப தயாராக இல்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச்சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவிக்கும் பெற்றோரின் துயரத்துக்கும் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்து, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப்பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.