தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்
வாணியம்பாடியில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதிஅமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் திரும்பிய போது பா.ஜ.க.வினர் அவரது காரை மறித்து செருப்பு வீசிய சம்பவத்தை கண்டித்தும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தியும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் முன்பாக நகர தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் வாணியம்பாடி-ஆம்பூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.