தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை
தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசினார்.
சிவகாசி,
தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் வரவேற்றார்.
மின்கட்டண உயர்வு
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதை தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கவில்லை. விலை உயர்வை கண்டித்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.
அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது. தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை.
ஒரே தீர்வு
பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் விஜயகுமார், வக்கீல் முத்துப்பாண்டி, முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், யூனியன் கவுன்சிலர் சுடர்வள்ளி சசிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வந்தம் ஆரோக்கியம், வெங்கடேசன், கருப்பசாமி, பகுதி கழக செயலாளர்கள் சாம், தொகுதி கருப்பசாமி பாண்டியன், சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், ரமணப்பிரியன் மற்றும் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.