தி.மு.க. அரசு அறிவித்துள்ளது பொங்கல் தொகுப்பு அல்ல பொய்த்தொகுப்பு- அண்ணாமலை
எதிர்க்கட்சியாக இருக்கும்போது 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றவர்கள், இன்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
கோவை,
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தது. பொருளாதார நிபுணர் அமெரிக்காவில் படித்தவர். ஆனால் சொன்னதை ஏன் செய்யவில்லை? 2014-ம் ஆண்டு, 67 சதவீதம் பேர் சமையல் கியாஸ் பயன்படுத்தினர். தற்போது 99.3 சதவீதம் பேர் கியாஸ் பயன்படுத்துகின்றனர். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்காக தற்போது கியாஸ் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால் மத்திய அரசு போராடி, குறைந்த விலைக்கு கொடுத்து வருகிறது.
மின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பதாக தி.மு.க.வினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதற்கான ஒரு கடிதத்தை காட்டுங்கள். மின்வாரிய நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள், நஷ்டத்திற்கு காரணம் என்ன என்று வெளியிட்டால், மக்கள் தெரிந்து கொள்வார்கள். சோலார் மின் உற்பத்திக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர்.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுக்கவில்லை. பனை வெல்லத்தையும் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றவர்கள், இன்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். இது பொங்கல் தொகுப்பு அல்ல, பொய்த் தொகுப்பு. அமைச்சர் ஏ.வ.வேலு, ஏன் சர்க்கரை கொடுக்கிறோம் என்றால் அப்போது தான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என கூறியுள்ளார். 2024-ல் மக்கள் தி.மு.க.விற்கு முடிவுரை எழுதுவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.