தி.மு.க. ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை
தி.மு.க. ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக்த்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விஷச் சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில், பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ., இணைச்செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தொடங்கி வைத்து பேசியதாவது:-
எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை
தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதும், 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இருந்ததும் தான். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிகளுக்கும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்தினர், மகன், மருமகன், மகள் என ஒரே குடும்பத்தினர்தான் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்பட வில்லை.
தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் ஒன்றையும் அவர்கள் நிறைவேற்றவில்லை, பஸ், பால விலை, மின்சார கட்டணம், என அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்ந்து விட்டது. தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 500 பேரின் மருத்துவ கல்விக் கனவு பாதிக்கப்பட்டுள்ளது.
சாராயம், கஞ்சா
எங்கு பார்த்தாலும் சாராயம், கஞ்சா என தமிழகம் சீரழிந்து உள்ளது. மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டார். நீட் தேர்வை ரத்து, கல்வி கடன் ரத்து, நகை கடன் ரத்து என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. தற்போது பொதுமக்கள் தி.மு.க.வை நம்ப தயாராக இல்லை. மீண்டும் எப்போது எடப்பாடி ஆட்சி வரும் என காத்திருக்கிறார்கள். வரும் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொய்யான வாக்குறுதி
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் டி.டி.குமார் பேசியதாவது:-
தி.மு.க. பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க.வை பொதுமக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம், கஞ்சா என உள்ளது. தி.மு.க.வினர் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். வருங்காலத்தில் அ.தி.மு.க. எழுச்சி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி. ரமேஷ், கோவி சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என்.திருப்பதி, எஸ்.செல்வம், சி.எம்.மணிகண்டன், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், அரசு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரா.ரமேஷ், இணைச் செயலாளர் சி.பாண்டியன், டி.டி.சி.சங்கர், அவைத் தலைவர் ஜி.ரங்கநாதன், நகர துணைச் செயலாளர் ஆனந்தன், ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம், தம்பா கிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் சோடா வாசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ் நன்றி கூறினார்.