சூதாட்ட நிறுவனத்திடம் தி.மு.க. பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சூதாட்ட நிறுவனத்திடம் தி.மு.க. பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் (FUTURE GAMINGS) என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க. பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதாவின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.
ஆனால், நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் தி.மு.க. கட்சியின் தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.