தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீடு, பங்களாவில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை
வேடசந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீடு, தோட்டத்து பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கொங்குநகரை சேர்ந்தவர் வீரா எஸ்.டி.சாமிநாதன். இவர், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார்.
பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சி.பி.எஸ்.இ. பள்ளியையும் இவர் நடத்தி வருகிறார். இதைத்தவிர வேடசந்தூர், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான நிதிநிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வேடசந்தூருக்கு வந்தனர். இதில் ஒரு காரில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர், வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள வீரா எஸ்.டி.சாமிநாதன் வீட்டுக்கு சென்றனர்.
ஆனால் வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டில் வீரா எஸ்.டி.சாமிநாதன் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார்.
சுவர் ஏறி குதித்த அமலாக்கத்துறையினர்
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளில் 2 பேர், வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர். பெண் அதிகாரி உள்பட 4 பேர் வெளியே காரில் காத்திருந்தனர்.
மதியம் 2.15 மணியளவில் வீரா எஸ்.டி.சாமிநாதனின் தாய் சரஸ்வதி (வயது 70) அங்கு வந்தார். வீட்டின் மெயின்கேட்டை திறந்து உள்ளே சென்றார். உள்ளே 2 பேர் நின்று கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பூட்டிய வீட்டுக்குள் எப்படி உள்ளே வந்தீர்கள் என்று சரஸ்வதி அவர்களிடம் கேட்டார். அப்போது, தாங்கள் அமலாக்கத்துறையினர் என்றும், வீட்டில் சோதனை நடத்த வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து 'என் மகன் நல்லவன், எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை' என்று சரஸ்வதி கூறியபடி வீட்டை திறந்து உள்ளே சென்றார். அவருடன் அமலாக்கத்துறையினரும் உள்ளே சென்றனர். வீட்டில் ஒரு அறையில் சரஸ்வதி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அதிரடி சோதனை
சிறிதுநேரத்தில் மற்றொரு காரில் அமலாக்கத்துறையினர் 5 பேர் அங்கு வந்தனர். மொத்தம் 11 அதிகாரிகள், வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையிட்டனர். வீட்டின் அனைத்து அறைகள் மற்றும் மாடியில் வீரா எஸ்.டி.சாமிநாதன் அலுவலகமாக பயன்படுத்தும் அறை ஆகியவற்றில் சோதனை நடந்தது.
இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாலை 6.20 மணிக்கு சோதனை முடிந்து அமலாக்கத்துறையினர் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு தி.மு.க.வினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் வேடசந்தூர் அருகே தமுத்துபட்டியில் உள்ள வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிக்கு, வீரா எஸ்.டி.சாமிநாதன் நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத்துறையினர் அவரது வீடு, பங்களாவில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் பற்றிய எந்த விவரத்தையும் அமலாக்கத்துறையினர் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
மீண்டும் சோதனை
இதற்கிடையே நேற்று மாலை தமுத்துப்பட்டியில் உள்ள வீரா எஸ்.டி.சாமிநாதனின் தோட்டத்து பங்களாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு உள்ள லாக்கரை திறக்க சாவி இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் அந்த சாவி கோவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்து அவரது உதவியாளர் சாவியை கொண்டு வந்து அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர் லாக்கரை திறந்து சோதனை நடத்தி வருகின்றனர். அந்த பங்களாவில் தி.மு.க.வினர் குவிந்தனர். உடனே அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தி.மு.க.வினரை வெளியேற்றினர்.