எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. மகளிர் அணியினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. மகளிர் அணியினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மகளிா் அணி அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான மகாதேவி தலைமையில், மகளிர் அணியினர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், கடந்த 20-ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் நவரசம் கலைக்குழு சார்பாக பாடல்களை பாடிய பன்னீர் என்பவர் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினையும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யையும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யையும் தவறாக சித்தரித்து அவதூறான பாடல் ஒன்றை பாடினார். எனவே நவரசம் கலைக்குழு பாடகர் பன்னீர் மீதும், மதுரை அ.தி.மு.க. மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீதும், இந்த சட்ட விரோத செயலுக்கு துணையாக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவினை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்.