தி.மு.க. ஆட்சிக்காலம் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக திகழ பாடுபடுகிறோம் முதல்-அமைச்சர் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்காலம் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
நாட்டுப்பற்றுமிக்க தலைசிறந்த தமிழர்கள் இருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரிதான் இந்த ஜமால் முகமது கல்லூரி. அந்த தலைசிறந்த 2 தமிழர்களில் ஒருவர் எம்.ஜமால்முகமது. மற்றொருவர் என்.எம்.காஜாமியான் ராவுத்தர்.
இரண்டே இரண்டு நல்லவர்கள் சேர்ந்தால், எத்தனை பேருக்கு அறிவொளி கொடுக்க முடியும் என்பதன் அடையாளமாக இந்த கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றை தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால்தான் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும். அந்த நோக்கத்துக்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இது என்னுடைய கனவு திட்டம். அதனால்தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
துணை நிற்க வேண்டும்
பள்ளிக்கல்வியில் பெருந்தலைவர் காமராஜர் காலமும், கல்லூரிக்கல்வியில் நம்முடைய கருணாநிதி காலமும், சிறப்பாக விளங்கியதை போல, இந்த ஆட்சிக்காலம் உயர்கல்வியின், ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் ஜமால் முகமது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
கல்லூரி கல்வியை தேடி வரும் இளைஞர்களை, பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவாளிகளாக, அறிவுக்கூர்மை கொண்டவர்களாக, பன்முகத்திறமை கொண்டவர்களாக, வளர்த்தெடுக்க நீங்கள் திட்டமிட வேண்டும். ஜமால் முகமது கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
திறமைசாலிகள்
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கமானது உலகின் 19 நாடுகளில் இயங்கி வருவதை பார்க்கும்போது, எத்தகைய திறமைசாலிகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரியையும் மறந்துவிடாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களது கல்விக்கு உதவி செய்து வருவதை அறியும்போது, கல்வியுடன் சிறந்த மனிதாபிமானத்தையும் ஊட்டும் நிறுவனமாக நீங்கள் செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.
இத்தகைய சிறப்புமிகு கல்லூரியின் முப்பெரும் விழாவில் காணொலி மூலமாக கலந்து கொண்டு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவிக்க விரும்புகிறேன். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்போது நான் உங்களுடைய கல்லூரிக்கு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.