'தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை நிகழ்கிறது' பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சேலம்,
தே.மு.தி.க. கட்சியின் 'பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஜனாதிபதி தமிழகம் வருகையின் போது நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சட்டம் ஒழுங்கை கேள்விக் குறியாக்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியது.
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு. கவர்னர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை தடுப்பதும் தமிழக அரசின் கடமை.
திராவிடம் என்பது பொய் தவறான விஷயம், திராவிடம் இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது, திராவிடம் என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களுக்கு பொதுவானது. நாடாளுமன்ற தேர்தலுக்காக யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஜனவரி மாதம் கட்சி தலைமை முறையான அறிவிப்பு வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.