தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க.விற்கு தமிழ் உணர்வு வரும்: அண்ணாமலை தாக்கு


தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க.விற்கு தமிழ் உணர்வு வரும்: அண்ணாமலை தாக்கு
x
தினத்தந்தி 30 March 2024 1:47 PM IST (Updated: 30 March 2024 4:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும், கட்டாயமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- வழக்கம்போல, எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தேர்தல் நடைபெறும் நேரங்களிலும் மட்டுமே திமுகவினருக்கு வரும் தமிழ் உணர்வு, தற்போது பாராளுமன்றத் தேர்தல் நேரத்திலும் வந்திருப்பது ஆச்சரியமில்லை. கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கி தமிழகத்தை சுரண்டிக் கொழுத்த திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.

தமது தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்றும், தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்தும் நமது பிரதமர் மோடி, வருத்தம் தெரிவித்திருந்ததை, முதலமைச்சர் ஸ்டாலின் கேலி செய்திருக்கிறார். மோடி இன்று, நேற்று இதனைக் கூறவில்லை. திமுகவினரைப் போல, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போல, ஸ்டாலின் போல, மொழியை வைத்து நடத்தும் வியாபார அரசியலைச் செய்ய வேண்டிய அவசியம், மோடிக்கு இல்லை. அவர் இந்தியாவின் பிற மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், தமிழ் மொழி தான் தொன்மையான, இனிமையான மொழி என்று பெருமையுடன் கூறி வருகிறார்.

பல ஆண்டுகளாக, இந்தியாவின் பல மாநிலங்களில் பேசும்போதும், உலக அரங்கில் பல நாடுகளில் பேசும்போதும், பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், ஏன், ஐநா சபையில் பேசும்போது கூட, உலகின் தொன்மையான மொழியான தமிழ், என் நாட்டின் மொழி என்று பெருமையுடனேயே கூறியிருக்கிறார். தமிழ் மொழியின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார். உலக நாடுகளின் தலைவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து, தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பறைசாற்றியிருக்கிறார். பிரதமர் மோடி. தமிழ் மீது கொண்டுள்ள பற்றுக்கும், தமிழகத்தின் மீது கொண்டுள்ள அன்புக்கும், ஸ்டாலின் அவர்களின் சான்றிதழ் அவசியமில்லாதது. அர்த்தமற்றது.

ஆகாசவாணி என்பது, பிரசார் பாரதி நிறுவனத்தின் வானொலிப் பிரிவின் பெயர். இன்று நேற்றல்ல. சுமார் 70 ஆண்டுகளாக, ஆகாசவாணி என்பதாகத்தான் இருக்கிறது. ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சியாக, தேர்தல் நேரத்தில் மட்டுமே காட்டும் தமிழ் ஆர்வத்தில் சிறிதேனும், பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில், பசையான பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோது காட்டியிருந்தால், தமிழக மக்கள் இந்த நாடகத்தை நம்பியிருப்பார்கள். எனவே தேர்தல் நேர நாடகங்களை நிறுத்திவிட்டு, உண்மையாகவே ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும், தேசியக் கல்விக் கொள்கையை தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும், கட்டாயமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story