எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு பேச தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு


எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு பேச  தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பஸ்போர்ட் திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு பேசக்கூடாது என தி.மு.க. கவுன்சிலர்கள் திட்டக்குழு கூட்டத்தில் தெரிவித்ததால் காரசார வாக்குவாதம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் பஸ்போர்ட் திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு பேசக்கூடாது என தி.மு.க. கவுன்சிலர்கள் திட்டக்குழு கூட்டத்தில் தெரிவித்ததால் காரசார வாக்குவாதம் நடந்தது.

திட்டக்குழு கூட்டம்

குமரி மாவட்ட திட்டக்குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திற்பரப்பு அருவியில் ரூ.4.30 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து அங்கு புதிய நுழைவு வாயில் அமைக்க வேண்டும். மண்டைக்காடு பகுதியில் கடைமடை கால்வாய்களுக்கு தண்ணீர் வரும்போது சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் வகையில் செத்து போன ஆடுகள், மாடுகள் இறந்த நிலையில் வருகின்றன. அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

காரசார வாக்குவாதம்

இதை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், "நாய் தொல்லையை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திற்பரப்பு பேரூராட்சியில் இருந்து கொடுக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி அங்கு மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது. திற்பரப்பு அருவியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பாட்டு பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை தற்போது நெல்லை கோட்ட பராமரிப்பில் உள்ளது. அதை நாகர்கோவில் கோட்டத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மாற்றப்படும். கால்வாய்களில் செத்து போன கால்நடைகள் வருவதாக கூறப்பட்டு இருப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்" என்றனர்.

இதைத் தொடர்ந்து திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் பேசுகையில், "நாகர்கோவில் மாநகர பகுதியில் புதிய பஸ் போர்ட் அமைக்க முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார். பஸ் போர்ட் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார். ஆனால் அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் போர்ட் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. எனவே அவரது பெயரை குறிப்பிட்டு பேசக்கூடாது என தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசியதால் காரசார வாக்குவாதம் நிலவியது.

பஸ் போக்குவரத்து

கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும், ரப்பர் பூங்கா அமைக்க வேண்டும், சுற்றுலா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற வேண்டும், டவுன் ரெயில் நிலையத்துக்கும், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும் இடையே பஸ் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story