தி.மு.க. பெண் கவுன்சிலர் தர்ணா


தி.மு.க. பெண் கவுன்சிலர் தர்ணா
x

குப்பை அகற்றாதது, கால்வாய் தூர்வாரப்படாததை கண்டித்து பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வேலூர்

குப்பை அகற்றாதது, கால்வாய் தூர்வாரப்படாததை கண்டித்து பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

பேரணாம்பட்டு நகராட்சி 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷாகீரா மீராஞ்சி சலீம். இவர் தனது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படவில்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்ததாகவும், கொசு மருந்து அடித்து 6 மாதங்களுக்கு மேல் ஆனதால் கொசு உற்பத்தி அதிகமாகி வருவதாகவும், இது குறித்து நகராட்சி பொது சுகாதார பிரிவு ஊழியர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் கவுன்சிலர் ஷாகீரா மீராஞ்சி சலீம் கோரிக்கை மனுவுடன் நகராட்சி ஆணையாளரை சந்திக்க நகராட்சி அலுவலகத்திற்கு வந்த போது நகராட்சி ஆணையாளர் சுபாஷினி வரி வசூல் செய்ய வெளியில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. கவுன்சிலரை அங்கிருந்த ஊழியர்கள் யாரும் கண்டுக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அவர் மாலை 4.45 மணியளவில் அலுவலக படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலரே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த நகராட்சி துணை தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத் விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு வார்த்தைக்கு அலுவலகத்துக்குள் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் கவுன்சிலர்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் முஜம்மில் அஹம்மத் இந்த தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இது குறித்து தகவலறிந்த ஆணையாளர் சுபாஷினி இரவு 7.30 மணிக்குவந்து கவுன்சிலர் ஷாகிரா மீராஞ்சி சலீமை சமரசம் செய்து கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்டு, குப்பை கிடங்கு இல்லாதலால் குப்பைகள் எடுப்பதில் சிரமம் உள்ளது. ஒரு வார காலத்தில் குப்பை கிடங்கு தயாராகி விடும். அதன்பிறகு குப்பைகள் தேங்காதவாறு அகற்றி, கால்வாய்கள் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர் போராட்டத்த கைவிட்டார்.


Next Story