நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்


நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

பயிற்சி பாசறை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தென்பள்ளிப்பட்டு கலைஞர் திடலில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன் தனுசு, அருள்குமரன், விஜய்ராஜ், கலைமணி, ரஞ்சித், தினேஷ்குமார், ராம்மோகன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார் வரவேற்றார்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடக்கவுரை ஆற்றினார்.

திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி, மாநில சுயாட்சி என்ற தலைப்பில் ஊடகவியலாளர் லெனின் ஆகியோர் பேசினார்கள். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநாடு போல் காட்சி அளிக்கிறது

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

திருவண்ணாமலைக்கு நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு முதல்முறையாக தற்போது வந்துள்ளேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க இளைஞர் அணி தான் முக்கிய காரணம். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் இணைத்து நடத்தப்படும் இந்த இளைஞர் அணி பாசறை கூட்டம் மாநாடு போல் காட்சியளிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் இந்த இளைஞர் பாசறை கூட்டத்தை தொடங்கினோம் அதனைத்தொடர்ந்து 5 மாதங்களில் 210 தொகுதிகளில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தியுள்ளோம்.

இந்த கூட்டமானது தி.மு.க.வின் வரலாற்றை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது. கூட்டம் சேர்ப்பது பெரிதல்ல. கொள்கையை கொண்டு போய் சேர்ப்பது தான் முக்கியம். அதனால் மீண்டும் தொகுதி வாரியாக மற்றும் ஒன்றியங்கள் வாரியாக இந்த இளைஞர் பாசறை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

அண்ணன் அமைச்சர் எ.வ.வேலு, கலைஞரிடம் பயிற்சி பெற்றவர். எதிலும் வல்லவர் என்பதை செயல்படுத்தி காட்டக்கூடிய திறமை மிக்கவர்.

இந்தி திணிப்பு

மத்தியில் ஆளுகின்ற பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வர முடியவில்லை. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய உரிமை மற்றும் பல்வேறு திட்டங்களை அனைத்தும் பறிக்கப்படுகின்றன.

தி.மு.க. எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது. இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்கல்வியில் இந்தியை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

இதை எதிர்த்து முதல் முதலாக குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதனைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க.வினர் தமிழகத்தில் எப்படியாவது இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். திராவிட கழகம் இருக்கும் வரை, தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை இந்தி திணிப்பை தமிழகத்தில் கொண்டு வரவே முடியாது.

பா.ஜ.க.வின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அடிபணிய மாட்டார். தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் பிரதமர் மோடி திருக்குறளை பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் பேசுவார். ஆனால் தமிழகத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்.

முன்பெல்லாம் தி.மு.க.வா?, அ.தி.மு.க. வா? என பேசப்படும். தற்போது அதுமாறி ஆரியமா, திராவிடமா என்று பேசப்பட்டு வருகின்றன.

40 தொகுதிகளிலும் வெற்றி

அ.தி.மு.க.விற்கு என்று கொள்கை எதுவும் கிடையாது. ஒரே கொள்கை தி.மு.க.வை எதிர்ப்பது தான். தற்போது வலிமையான தலைமை இல்லாத காரணத்தால் அ.தி.மு.க. நான்காக பிரிந்து உள்ளன.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். தி.மு.க. தலைமையில் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. தலைவர் மு.க.ஸ்டாலின் கையை காட்டுபவர் தான் மேலே வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. வழங்கினார்.

கூட்டத்தில் மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, ஜோதி, அம்பேத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய குழு தலைவர்கள் கலசபாக்கம் அன்பரசி ராஜசேகரன், புதுப்பாளையம் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் துரிஞ்சாபுரம் மேற்கு ராமஜெயம், புதுப்பாளையம் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story