தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட காலம்; எடப்பாடி பழனிசாமி பேச்சு


தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட காலம்; எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட காலம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருச்சி

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மத்திய அரசின் பாரத மிகுமின் நிலையம் (பெல்) அமைந்துள்ளது. இதன் நுழைவு பகுதியில் பெல் நிறுவன அனுமதியுடன் அ.தி.மு.க.வின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 7 அடி உயரமுள்ள முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவா் பேசியதாவது:-

நாம் தான் வாரிசு

பெல் நிறுவனத்தில் 1995-ம் ஆண்டு சிமெண்டு சிலையை நிறுவினார்கள். 2005-ம் ஆண்டு வெண்கல சிலையை நிறுவினார்கள். அந்த சிலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பெல் நிறுவனத்திடம் 4 ஆயிரம் சதுர அடி இடம் பெற்று பிரமாண்டமான முழு உருவ சிலையை மீண்டும் நிறுவி உள்ளனர்.

நம்மை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் சிலையை உங்களில் ஒருவனாக இருந்து திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக பணியாற்றி வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்று உள்ளனர். நம்முடைய தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. நாம் தான் அவர்களின் வாரிசு. அவர்கள் மக்களுக்காக உழைத்தவா்கள்.

கருணாநிதி தம் மக்களுக்காக (குடும்பத்துக்காக) உழைத்தவர். ஜெயலலிதா தனக்கு பிறகு ஒரு தொண்டன் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று நினைத்தார். அ.தி.மு.க.வில் விசுவாசமாக இருந்தால் எதாவது ஒரு பதவி நிச்சயம் கிடைக்கும். ஆனால் தி.மு.க.வில் பணம் இருந்தால் தான் பதவி கிடைக்கும். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர் ஆகலாம். கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகலாம். தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டன் கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியாது.

31 ஆண்டு ஆட்சி

எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க முடியாது. மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. இதனால் தான் அவர் பி டீமை (ஓ.பன்னீர்செல்வம் அணி) உருவாக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இங்கு மாநாடு நடத்தினார். ஆனால் நாம் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படும் என்று அறிவித்ததற்கே இங்கு மாநாடு போல் தொண்டர்களான நீங்கள் திரண்டு உள்ளீர்கள்.

தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இன்று எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்தையே உங்களால் பாதுகாக்க முடியவில்லை. உங்கள் கட்சியினரையே பாதுகாக்க முடியவில்லை. வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் எப்போது ரெய்டு வரும் என்ற பயத்தில் பல அமைச்சர்களுக்கு தூக்கம் போய்விட்டது.

இருண்ட ஆட்சி

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதும், ஏதாவது வாய்திறந்து விடுவாரோ என்று பயந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அவரது குடும்பத்தினர் வரை அவரை சென்று பார்த்து வருகிறார்கள். தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி. 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு துன்பமும், வேதனையும் தான் கிடைத்துள்ளதே தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.

இந்த 2 ஆண்டு காலத்தில் மு.க.ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடித்தது தான் மிச்சம். அவர்களது குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து இருப்பதாக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோ மூலம் கூறுகிறார். செந்தில்பாலாஜி வாய் திறந்தால் இந்த ஆட்சி கோவிந்தா தான். இந்த ஆட்சியை காப்பாற்றவே அவர்கள் செந்தில்பாலாஜியை காப்பாற்ற துடிக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் ஒரு சில அறிவிப்புகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு அனைத்தையும் நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு என்று அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள். விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை இல்லை.

இங்குள்ள அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகருக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். எங்கள் ஆட்சி காலத்தில் தான் திருச்சி மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். திருச்சியில் தேசிய சட்டப்பள்ளி, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது

நீட் தேர்வு கொண்டுவர காரணம் காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம். நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் கடந்த ஆண்டு 564 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்றது. இதுதான் அ.தி.மு.க.வின் சாதனை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

போதைப்பொருள், கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. செங்கல்பட்டில் கோர்ட்டில் வெடிகுண்டு வீசுகிறார்கள். தற்போது, அரிவாள், கத்தி கலாசாரம் போய், குண்டுவீசும் கலாசாரம் உருவாகி உள்ளது. கள்ளச்சாராயத்தால் 23 பேர் பலியாகி உள்ளனர். 2 நாட்களில் நடவடிக்கை எடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துவிட்டதாக கூறுகிறார்கள். அப்படியானால் அத்தனை நாட்கள் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது என்றுதானே அர்த்தம்.

காவிரி நதிநீர் பிரச்சினை

தற்போதைய காவல்துறை தி.மு.க. நிர்வாகிகளிடம் சேவகம் செய்யும் காவல்துறையாக மாறிவிட்டது. இனியாவது காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக காவிரி நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். காவிரி நடுவர் மன்றத்தை சட்டரீதியாக கொண்டுவந்து காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க ஜெயலலிதா வழிவகை செய்தார்.

தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டார்கள். கடந்த ஜூன் மாதம் 9 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதுவரை கர்நாடகா கொடுக்கவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மேட்டூர் அணையை திறந்து விட்டுவிட்டார். தற்போது அணையில் தண்ணீர் குறைந்து கொண்டு வருகிறது. கர்நாடகாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது.

அவர்களிடம் பேசி தண்ணீரை பெற்றுக்கொடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் மீத்தேன் எடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம். நல்லது செய்ய அ.தி.மு.க. தொண்டர்கள் பயப்படமாட்டார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சிவபதி, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story