திமுகவினரின் ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்படும்: அண்ணாமலை
தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.
சென்னை
தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இதன்படி நாளை காலை 10.15 மணிக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை இன்று டுவிட்டரில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க. பைல்ஸ் என்கிற தலைப்போடு வெளியிட்டிருக்கும் வீடியோவில் முன்னாள் முதலமைச் சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், அமைச்சர் உதயநிதி, மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மு.க.அழகிரியின் மகன் துரை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் ஏப்ரல் 14 காலை 10.15 மணி என்றும் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார். நாளை காலை டுவிட்டர் இணைய தளம் மூலமாக தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்பதை அண்ணாமலை இன்றே அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.