ரூ.1,000 கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவித்து பாதி பேருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை தரப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாராலும் ஏற்க முடியாத ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதித்து தாய்மார்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது என்று கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறவே உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்றும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.