தி.மு.க.வின் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்பாக தான் இருக்கிறது-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


தி.மு.க.வின் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்பாக தான் இருக்கிறது-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x

தி.மு.க.வின் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்பாக தான் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

தி.மு.க.வின் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்பாக தான் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலவச பயணம்

தமிழகத்திற்கு பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சிக்காக தான் வந்திருந்தார். அரசியல் நிகழ்ச்சிக்காக வரவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியை சந்திக்காதது மிகப்பெரிய விஷயமில்லை. அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேருவதற்கு 1 கோடியே 75 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தான். எனவே தான் அங்கு தற்போது நிலக்கரி எடுப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது.

மதுரை-நத்தம் மேம்பாலம் மதுரையில் திறக்கப்பட்டு உள்ளது. இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான். இந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. மக்களுக்கான எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்றார்கள். ஆனால் குறிப்பிட்ட பஸ்களில் தான் அனுமதிக்கிறார்கள்.

பேனா சிலை

2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை தருவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது வெறும் 1 கோடி பேருக்கு தான் மாதம் ரூ.1000 தருவதாக சொல்கிறார்கள். இது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய போது, இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது இது குறித்து விரிவாக அறிவிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தற்போது தி.மு.க. ரிப்பன் வெட்டி திறக்கும் திட்டம் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை தான். கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்காக தான் மத்திய அரசை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் வைப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வெறும் அறிவிப்பாக தான் இருக்கிறது. மதுரையில் ஒரு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் கப்பலூர் தொழிற்பேட்டையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதயநிதி அவர் அப்பாவை (மு.க.ஸ்டாலின்) புகழ்ந்து பேசுவதையே வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story