அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துஈரோட்டை நோக்கி முதல்-அமைச்சரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும்;அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து ஈரோட்டை நோக்கி முதல்-அமைச்சரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து ஈரோட்டை நோக்கி முதல்-அமைச்சரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கோரிக்கை
அருள்நெறி திருக்கூட்டம் அறக்கட்டளையின் சார்பில் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அறக்கட்டளை தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சி.வி.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-
ஆன்மிக திருத்தொண்டர்களான நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள் என தெரியும். உங்களுடைய ஆதரவு தி.மு.க. கூட்டணிக்கு வேண்டும். நான் அமைச்சராக பொறுபேற்ற பிறகு கடந்த 1½ ஆண்டுகளாக எனது துறை சார்பில் ஆய்வு நடத்தினேன். கடந்த 10 ஆண்டுகளில் கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஈரோடு வஞ்சிக்கப்பட்டு உள்ளது.
அதிக ஓட்டு வித்தியாசம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.700 கோடியை ஒதுக்கீடு செய்து உள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சு.முத்துசாமி 13 திட்டங்கள் குறித்து என்னிடம் கோரிக்கை வைத்து உள்ளார். அதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து ஆய்வு செய்ய முயற்சி எடுக்கப்படுகிறது. வருகிற மார்ச் மாதம் நடக்கும் பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பதன் அடிப்படையில் பல்வேறு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே எனது ஆசை என்னவென்றால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்து ஈரோட்டை நோக்கி முதல்-அமைச்சரை திரும்பி பார்க்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மாநில பொறுப்பாளர் வி.சி.சந்திரகுமார், இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் கே.இ.பிரகாஷ், காங்கிரஸ் கட்சி மண்டல செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.