18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாதுவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பேச்சு


18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாதுவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பேச்சு
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என்று பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ஜெனிபர் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், இளம்வயது திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது நீதிபதி பேசியதாவது:-

போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் கெடுவதோடு, மன நலமும் பாதிக்கின்றன. மாணவ, மாணவிகள் எக்காரணம் கொண்டும் போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மற்றவர்கள் பயன்படுத்துவதை பார்த்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.

போக்சோ சட்டத்தில் கைது

எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, ஹெல்மெட் அணிந்து, விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். இக்கருத்தை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். இளம்வயது திருமணம் செய்தாலோ, பெண்களை ஆபாசமாக சித்தரித்தலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பள்ளிக்கு வரும் நீங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். பின்னர் வக்கீல் கதிரேசன், மாணவ, மாணவிகளுக்கு இளம் வயது திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story