தமிழகம் முழுவதும் 140 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது:ரேஷன் அரிசியை இடைத்தரகர்களுக்கு விற்க வேண்டாம்பொதுமக்களுக்கு கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் 140 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆகவே பொதுமக்கள் இடைத்தரகர்களிடம் ரேஷன் அரிசியை விற்க வேண்டாம் என்று கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், கூட்டுறவு கடன் சங்கங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கடலூர் வந்தார்.
தொடர்ந்து அவர் கடலூர் அருகே சிங்கிரிகுடி ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொருட்களின் இருப்பு விவரம், பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆயில் மில், நெல் அறுவடை எந்திரத்தின் செயல்பாடுகள், இரண்டாயிரம்விளாகம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலமாக கடனுதவி வழங்கி உறுப்பினர்களால் செயல்படுத்தப்படும் மீன் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடன் உதவி
அதன்பிறகு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நபார்டு திட்டத்தின் கீழ் வி.குமாரமங்கலம், வி.சாத்தமங்கலம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா ஒரு லாரியும், முத்தாண்டிக்குப்பம், வடபுரம் கீழ்பாதி ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா ஒரு மினி லாரியும் வழங்கினார். 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.52 லட்சம் கடன் உதவி வழங்கினார். இதையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார்.
முன்னதாக கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடோன்கள்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட, கூட்டுறவு வங்கிகள், கடன்சங்கங்கள் மூலம் ஆண்டுதோறும் 68 ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு கடன்களாக வழங்கி வருகிறோம். நகைக்கடன் கூடுதலாக 18 வகையான கடன்களை வழங்குகிறோம்.
கடலூர் மாவட்டத்தில் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது. அதில் ரேஷன் கடைகளுக்கான பொருட்களை இருப்பு வைப்பதற்கான குடோன்கள் 10 உள்ளது. அதில் 46 ஆயிரத்து 850 மெட்ரிக் டன் சேமிக்க முடியும். குறைந்தது 10 ஆயிரம் மெட்ரிக் டன் முதல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை சேமிக்கும் வகையில் கூடுதலாக குடோன்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2 ஆயிரம் ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்படும்
ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டு கடலூரை பொருத்தவரை 1 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 34 லட்சத்து 64 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து உள்ளோம். 2 ஆயிரம் ரேஷன் கடைகளை புதுப்பிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ரேஷன் அரிசி கடத்தல் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த மே 21-ந்தேதி முதல் இப்போது வரை 15,826 வழக்குகள் போட்டு, 15 ஆயிரத்து 883 பேரை கைது செய்து இருக்கிறோம். 140 பேரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து உள்ளோம்.
நடவடிக்கை
சில பகுதிகளில் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி, விற்பனை செய்து விடுகிறார்கள். உணவு பாதுகாப்புக்கு இலவசமாக அரிசி கொடுப்பது உன்னதமான திட்டம். உங்களுக்கு தேவையில்லை என்றால் ரேஷன் அரிசியை வாங்காதீர்கள். அதற்காக அதை வாங்கி விற்காதீர்கள். இது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் இடைத்தரகர்களிடம் ரேஷன் அரிசியை விற்க வேண்டாம். யார் தவறு செய்யாமலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் திலீப்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், பொது மேலாளர் பழனிமணி, துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, சண்முகம், எழில்பாரதி, வைரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.