போலி பெண் மருத்துவர் கைது
பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் மருந்துக்கடையில் கிளீனிக் நடத்திய போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் மருந்துக்கடையில் கிளீனிக் நடத்திய போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலி மருத்துவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் ஜெய் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதார நலப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கனகராணி தலைமையில் தேசிய நல குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுடர்விழி, மாவட்ட சுகாதார துறை நிர்வாக அலுவலர் முருகேசன், அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் அந்த மருந்து விற்பனை கடையில் ஆய்வு நடத்தினர்.
தனி அறையில் சிகிச்சை
அப்போது அங்கு பணியில் இருந்த கோகிலா என்பவர் மருந்து கடையின் பின்புறம் தனி அறையில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ ஆய்வு குழுவினரிடம் முதலில் அவர் தன்னை மருத்துவர் என கூறி அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குப்புசாமிநாயுடுபுரம் லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்த சின்னராசு மனைவி கோகிலா (30) என்பதும் அவர் மருத்துவம் சம்பந்தமான எந்த படிப்பும் படிக்கவில்லை என்றும் பள்ளி படிப்பை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் மருந்து கடைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதும், காயங்களுடன் வருபவர்களுக்கு கட்டுப்போட்டு விடுவதும், மருந்துகளை கொடுப்பதையும் செய்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
போலி பெண் மருத்துவர் கைது
நர்சிங் கிளீனிக் நடத்த வேண்டும் என்றால் அதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் உரிய அனுமதி இன்றியும், உரிய கல்வி தகுதி இன்றியும் ஆங்கில மருந்துகளை கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்துக்கொண்டு இருந்த போலி மருத்துவர் கோகிலா மீது பல்லடம் போலீசில் தேசிய நல குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு புகார் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் கோகிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தனியார் மருந்து விற்பனை கடையை பூட்டி 'சீல்'் வைக்கப்பட்டுள்ளது.