போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்; டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து


போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்; டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 27 Feb 2023 2:00 AM IST (Updated: 27 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம் குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.

'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி'

என்கிறார், வள்ளுவர்.

போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.

போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதைக் காண முடிகிறது.

நீதிமன்றம் தடை

போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை சவைத்து உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.

சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, 'பான்பராக், குட்கா போன்றவை புற்றுநோய்க்கு ஆதாரமாக இருப்பதுடன், பிறர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவும் இருக்கிறோம். தற்போது இருக்கும் சட்டத்தால் இதனை தடை செய்ய முடியவில்லை என்றால், எந்த வழியிலும் திரும்பவும் விற்பனைக்கு வந்து இளைய சமுதாயத்தினரை பாதிக்காத வகையில், சட்டசபையில் விவாதித்து புதிய சட்டத்தை கொண்டு வரவும் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்து உள்ளார்' என்றார்.

மனக்கட்டுப்பாடு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய், உளவியல் மற்றும் புகையிலை தடுப்பு மைய துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன் வீரைய்யா கூறும் போது, ' நம் நாட்டில் புகையிலையால்தான் 40 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது. புகையிலையில் பல வகைகள் இருந்தாலும் வாயில் மெல்லும் வகை புகையிலை முன்பு கிடையாது. கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பரவலாக புழக்கத்தில் வந்து உள்ளது. இங்கு தயாரிப்பு இல்லை என்றாலும் அதிகமான பேர் இதற்கு அடிமையாகி உள்ளனர். புகைப்பிடிப்பதால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் வாயில் மெல்லும் புகையிலையால் அதனை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக வாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைகிறது. அத்துடன் வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பழக்கம் உள்ளவர்கள் சரியான நேரத்தில் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெறாமல், முற்றிய நிலையில் சந்திப்பதால் நோயை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பான்பராக், குட்கா போன்ற போதை பாக்குகள் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் வந்தால் மருத்துவ சிகிச்சையும், மருத்துவமனையில் தங்கி இருக்கும் காலமும் அதிகம் தேவைப்படும். போதைப்பாக்குகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இளைய தலைமுறையை தான் இலக்காக கொண்டு விற்பனை செய்கின்றனர். இளைய சமுதாயத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு இதன் விற்பனையை அடியோடு நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமும் மனக்கட்டுப்பாடுடன் இருந்து ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க அனைவரும் முன்வர வேண்டும்' என்றார்.

படிப்பு பாதிக்கப்படும்

அரசு மருத்துவர் சீனிவாசன் (திண்டுக்கல்):- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சக மாணவர்கள் மூலம் போதை வஸ்துகளை பயன்படுத்தும் பழக்கம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். மேலும் சிறு விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு சண்டையிடுவார்கள். தொடர்ச்சியாக போதை வஸ்துகளை பயன்படுத்துவதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, நினைவு திறனும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி உடல் ஆரோக்கியம் பாழாகி திருமண வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கும். எனவே மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவதை தடுப்பது மிகவும் அவசியம். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை கண்காணிக்க வேண்டும். புத்தகப்பை, சட்டைகளை அடிக்கடி சோதனையிட வேண்டும். மாணவர்களின் நண்பர்களிடம் விசாரித்து போதை வஸ்து பழக்கம் இருந்தால் அதில் இருந்து மீட்க வேண்டும்.

குடும்ப தலைவி ராதா (பழனி) :- உலகில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இந்த இளைஞர்களில் பலர் போதைபொருட்களை பயன்படுத்துவதால் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்றவற்றக்கு தடை என்பதும் இருந்தாலும் அவற்றின் விற்பனை மறைமுகமாக நடக்கிறது. போதைபொருள் கடத்தல் சம்பவங்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. தமிழக இளைஞர் சமுதாயம் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்றால் போதை பொருட்கள் அனைத்தையும் முழுமையாக தடை செய்ய வேண்டும். அதற்கான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாளைய இளைஞர் சமுதாயம் நல்ல முறையில் இருக்கும்.

பள்ளி அருகில் விற்பனை

விவசாயி அந்தோணி (கொசவப்பட்டி) :- இளைய சமுதாயம் போதையில் மூழ்கி, தங்களுடைய வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறது. அதை தடுப்பதை அரசு முக்கிய பணியாக மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன. மாணவர்களை சீரழிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணித்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

குடும்ப தலைவி நாகரத்தினம் (நத்தம்) :- பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் உள்பட அனைத்து வகையான போதை வஸ்துகளும் விற்கப்படுகின்றன. சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும், கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாணவர்களின் நலன்கருதி போதைவஸ்துகளை முழுமையாக தடை செய்ய வேண்டும். போதை வஸ்துகளை பயன்படுத்துவதால் மாணவர்களின் உடல்நலம் மட்டுமின்றி எதிர்கால வாழ்க்கையும் பாழாகி வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story