24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும்
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சீர்காழி;
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஒன்றியக்குழு கூட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, ஒன்றியக்குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலாளர் சுலோச்சனா வரவேற்று பேசினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-ஜான்சிராணி(சுயேச்சை): திருக்காட்டுப்பள்ளி தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். திருவெண்காட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர் செவிலியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.நடராஜன்(அ.தி.மு.க): ஊராட்சி முழுவதும் தூய்மை பணியாளர்கள் முறையாக பணி செய்வது இல்லை. இதுகுறித்து ஆணையர் ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும். ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வளர்ச்சி பணிகளை சிறு சிறு பணிகளாக வழங்காமல் ஒரே பணியாக வழங்க முன்வர வேண்டும்.தென்னரசு (தி.மு.க): எடகுடி வடபாதி அங்காடி கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஊராட்சிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை மயான சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
சேதமடைந்த சாலை
விஜயகுமார் (அ.தி.மு.க): சீர்காழியிலிருந்து திட்டை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.ஆணையர்: நியாய விலை கட்டிடம் சட்டமன்ற, பாராளுமன்ற நிதி அல்லது என். ஆர். ஜி. எஸ்.ஆகிய திட்டத்தின் கீழ் மட்டுமே கட்ட முடியும். ஊராட்சிகளில் தீர்மானம் வைத்து கொடுத்தால் என்.ஆர்.ஜி. எஸ். திட்டத்தின் மூலம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
டாக்டர்கள்
கமலஜோதி தேவேந்திரன்(தலைவர்):திருவெண்காடு அரசு ஆஸ்பத்திரி 24 மணி நேரமும் டாக்டர்களுடன் இயங்க தீர்மானம் நிறைவேற்றப்படும். வரும் காலங்களில் அரசு விழாக்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினாா்.கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் சிவக்குமார், கலையரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ முத்துக்குமார் நன்றி கூறினார்.