குடியிருப்பு பகுதியில் செயல்படுகின்றதா? - குவாரிகளை ஆய்வுசெய்ய நீதிபதிகள் உத்தரவு
குடியிருப்பு பகுதியில் செயல்படுகின்றதா? என்று குவாரிகளை ஆய்வுசெய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்த ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் 300 மீட்டர் சுற்றளவுக்குள் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என சட்ட விதிகளும், ஐகோர்ட்டு உத்தரவும் தெளிவாக கூறுகின்றன.
இந்த நிலையில் இவற்றை மீறி, அங்கு கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பது சட்ட விரோதம். தற்போது குவாரி செயல்பாட்டிற்காக அதே பகுதியில் உள்ள நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமித்து குவாரிக்கான வாகனங்கள் செல்லும் சாலையாக மாற்றியுள்ளனர்.
இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே சட்ட விதிகளுக்கு முரணாக கல் குவாரி நடத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். முதற்கட்டமாக அந்த குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுக்களில் முரண்பாடு இருப்பதாகவும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், சம்பந்தப்பட்ட குவாரியை ஆய்வு செய்வதற்காக வக்கீல் இனியன் கார்த்திக் என்பவரை வக்கீல் கமிஷனராக நியமித்தனர். அவர் அங்கு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.