மன்னார்குடியில்வெறிநாய் கடித்ததில் 16-க்கும் மேற்பட்டோர் காயம்
மன்னார்குடியில் வெறிநாய் கடித்ததில் 16-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மன்னார்குடியில் வெறிநாய் கடித்ததில் 16-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
வெறிநாய்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரை பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த நாய் அங்குள்ள கடையில் அமர்ந்திருந்த ஒருவரை கடித்தது. இதே போல் மன்னார்குடி வினோபாஜி தெரு, பஸ் நிலையம் பகுதி வழியாக சென்ற வெறி நாய் சாலையில் சென்றவர்களை கடித்துள்ளது.
வெறிநாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை
வெறிநாய் கடித்து சிகிச்சை பெற்றவர்களை நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெறி நாய்களை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வெறி நாய் ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 6 பேர் வெறிநாய் கடித்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று காலை மன்னார்குடி மீனாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை வெறிநாய் ஒன்று கடிக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரே நேரத்தில் 16-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.