சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி


சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 1 Jun 2023 12:30 AM IST (Updated: 1 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நடந்த நாய்கள் கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இதில் ஸ்பேனிஷ் மவுன்டெய்ன் ரக நாய் முதல் பரிசை தட்டி சென்றது.

திண்டுக்கல்

நாய்கள் கண்காட்சி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், கடந்த 26-ந்தேதி கோடை விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு விளையாட்டு போட்டி, மீன்பிடிக்கும் போட்டி, படகுபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு கட்டமாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 22-வது நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது.

4 சுற்றுகளாக நடந்த போட்டியில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு ரக நாய்கள் பங்கேற்றன.

சிறந்த நாய்கள் தேர்வு

கண்காட்சியில் கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்பர்டு, கிரேடன், ராட்வீலர், பக், செயின்ட் பெர்னாடு, பொம்மெரியன் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட வகையான நாய்களும், ஸ்பேனிஸ், ஜிஜீ, ஸ்பேனிஷ் மவுன்டெய்ன் உள்ளிட்ட புதுவகையான நாய்களும் கலந்து கொண்டன.

நாய்களின் குணாதிசயங்கள், கட்டளைகளுக்கு கீழ்படிதல், பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படைகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நாய்களின் செயல்பாடுகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

போட்டியில் உயர்ரக நாய்கள் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் ஸ்பேனிஷ் மவுன்டெய்ன் என்ற ரக நாய் முதல் பரிசை தட்டி சென்றது. அடுத்தடுத்த பிரிவுகளில் ஜெர்மன் செப்பர்டு, சைபீரியன் ஹஸ்கி, செயிண்ட்பெர்னார்டு, புல்டாக் முதல் பரிசுகளை கைப்பற்றின.

பரிசளிப்பு விழா

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம் தலைமை தாங்கினார். இதில் மன்னவனூர் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் திருமாறன், ஜெய வீரபாண்டியன், சுற்றுலா அலுவலர் சுதா ஆகியோர் கலந்துகொண்டு நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பிரபு, டாக்டர்கள் அப்துல்ரகுமான், சங்கர விநாயகம், அருண், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story