திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை
நன்றியுள்ள பிராணியாக கருதப்படும் நாய்களை பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் பிள்ளைகளுக்கு நிகராக செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர். நாய்களும் தங்களை வளர்க்கும் நபர்கள் மீது பாசத்துடனும், நன்றியுடனும் பழகி வருகிறது. குறிப்பாக தங்களை வளர்ப்பவர்கள் வசிக்கும் வீட்டை பாதுகாக்க எப்போதும் கண்காணித்து கொண்டே இருக்கும் பிராணியாக நாய்கள் விளங்குகிறது.
இப்படி வீடுகளில் வசிக்கும் நாய்களை அதனுடைய உரிமையாளர்கள் பத்திரமாக பராமரித்து, தடுப்பூசி செலுத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதனால் வெளியே செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.
குறிப்பாக வெளியூர், உள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தவரும் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அதிகமான எண்ணிக்கையில் வசித்து வரும் திருப்பூர் மாநகரில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தெருநாய்களை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கருத்தடை செய்து வந்தனர். இதன்காரணமாக தெருநாய்கள் அதிகரிப்பதை தடுக்க முடிந்தது. ஆனால் தற்போது இந்த பணி முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் தெருநாய்கள் அதிகரித்து வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
துரத்தி கடிக்கும் தெருநாய்கள்
மணி, (காவலாளி):-
நான் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் காவலாளியாக 7 வருடங்கள் பணியாற்றுகிறேன். இந்த பகுதியில் 20-க்கும் அதிகமான தெருநாய்கள் இருக்கிறது. இங்குள்ள தெருநாய்கள் புதிதாக யாராவது வரும்போது அவர்களை துரத்தி கடிக்கிறது. இரவு நேரத்தில் மட்டுமில்லாமல் பகலில் வருபவர்களையும் கடிக்கிறது. 6 மாதங்களுக்கு முன் இந்த பகுதிக்கு வந்த பெண்ணை தெருநாய்கள் கடித்ததில் அந்த பெண் பலத்த காயமடைந்தார். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்து கொண்டு போக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஷா ராணி, (போலீஸ் குடியிருப்பு):-
நான் போலீஸ் குடியிருப்பு பகுதியில் 3½ வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருகிறேன். இந்த பகுதியில் 40 வீடுகள் இருக்கிறது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருக்கிறது. அதிகாலையில் மார்க்கெட்டுக்கு செல்லும்போது தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து குரைக்கின்றது. இதனால் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது.
குறிப்பாக இங்கு 50-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் வீட்டிற்கு வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கின்றனர். வெளியே சென்றால் தெருநாய்கள் கூட்டமாக கூடி கடிக்க துரத்துகிறது. மேலும் பிள்ளைகள் விளையாட பயன்படுத்தும் பந்துகளையும் தெருநாய்கள் தூக்கி சென்றுவிடுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து சென்றால் நன்றாக இருக்கும்.
வனஜா:-
தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சில சமயங்களில் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டிற்கு வெளியே படுத்து கொள்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படுகின்றனர்.
மேலும் தெருநாய்கள் தெருக்களில் கிடக்கும் குப்பைகளில் உள்ள இறைச்சி கழிவுகளை தின்று மிச்சமீதியை இங்கே கொண்டு வந்்து போட்டுவிட்டு செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக மீன் இறைச்சியை சாப்பிட்டு விட்டு அதில் உள்ள முட்களை இங்கே கொண்டு வந்து போட்டு விட்டு சென்றது, அதை மிதித்ததால் தற்போது எனக்கு காயம் ஏற்பட்டு காலில் கட்டுபோட்டுள்ளேன்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதுபோல் அதிக தெருநாய்கள் சுற்றித்திரிந்தது. அதனை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர். ஆனால் தற்போது அப்படி எதுவும் நடைபெறவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பணியாளர்களுக்கு உத்தரவிட்டு இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூங்க முடியாமல் தவிக்கிறோம்
சாமிநாதன், (ராம்பிரான் காலனி):-
நான் தாராபுரம் ரோடு ராம்பிரான் காலனியில் 25 வருடங்களாக வசித்து வருகிறேன். இந்த பகுதியில் 15 முதல் 20 தெருநாய்கள் உள்ளது. கடந்த 2 வருடங்களாக இந்த தெருநாய்கள் இங்கே சுற்றித்திரிக்கிறது. அதற்கு முன் இந்த பகுதியில் தெருநாய்கள் இருந்தது இல்லை. தெருக்களில் சுற்றித்திரியும் இந்த தெருநாய்கள் வண்டி வரும் நேரங்களில் குறுக்கே ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். சமீபத்தில் கூட ஆயுத பூஜை அன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் தெருநாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீேழ விழுந்து கையில் அடிப்பட்டு மருத்துவமனைக்கு சென்று கட்டுபோட்டார்.
மேலும் தெருநாய்கள் இரவில் புதிதாக யாராவது தெருக்களில் நுழையும்போது அவர்களை துரத்தி கடிக்கிறது. இரவில் தெருநாய்கள் கூட்டமாக கூடி சத்தமிடுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் வேதனை அடைகின்றனர். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகரத்தில் இரவு, பகலாக உழைக்கும் பொதுமக்களுக்கு இதுபோன்ற தெருநாய்களால் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. இப்படி அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த முன்பு போல கருத்தடை செய்ய வேண்டும்.
எனவே அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் தெருநாய்களை பிடித்து அதற்கு கருத்தடை செய்த பிறகு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் வேறொரு இடத்திற்கு கொண்டு போய் விட்டால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.