உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்:
சின்னமுட்டத்தில் இயங்கி வரும் கன்னியாகுமரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகமானது கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டும், நாகர்கோவிலில் இயங்கும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் குளச்சலை தலைமை இடமாகக் கொண்டும், குளச்சலில் இயங்கும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் தேங்காப்பட்டணத்தை தலைமை இடமாகக் கொண்டும் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணைப்படி தனித்தனி அலுவலகமாக செயல்படுத்தும் போது உள்நாட்டு மீனவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் உள்நாட்டு மீன்வளத்துக்கு தனி உதவி இயக்குனர் அலுவலகம் நாகர்கோவிலில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஒருங்கிணைப்பு மைய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். உள்நாட்டு மீனவர் மக்கள் கூட்டமைப்பு குழித்துறை மறைமாவட்ட இயக்குனர் வெனிஸ் மைக்கேல்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மீனவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.