முதுமலை தெப்பகாட்டில் தேசியக்கொடிக்கு தும்பிக்கைகளை உயர்த்தி மரியாதை செலுத்திய வளர்ப்பு யானைகள்
முதுமலை தெப்பகாட்டில் தேசியக்கொடிக்கு தும்பிக்கைகளை உயர்த்தி வளர்ப்பு யானைகள் மரியாதை செலுத்தின.
முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று காலை 10 மணிக்கு வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் 77-வது சுதந்திர தின விழாவை கொண்டாடினர். மாயாற்றில் வளர்ப்பு யானைகள் குளிப்பாட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள், கரும்பு, தேங்காய், பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் தேசியக்கொடியை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா ஏற்றி வைத்தார். அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை உயர்த்தி பிளிறியவாறு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
தொடர்ந்து வனத்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த சுதந்திர தின விழாவில் வனச்சரகர்கள் விஜயன், மனோஜ் உள்பட வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள், ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை உயர்த்தி பிளிறியவாறு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது சுற்றுலா பயணிகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஆதிவாசி மக்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.